இலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தம் நவீன உலக ஒழுங்கோடு பொருந்தத்தக்கவாறு அறிவியல்பூர்வமானதாக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பாராளுமன்றின் இரண்டாம் இலக்க குழு அறையில் பிரதமரும் கல்வி அமைச்சருமான கெளரவ.ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பான உபகுழுவின் முதலாவது கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
நவீன மாணவ உலகில், எந்தப் பிள்ளையும் கல்வியைச் சுமையாகக் கருதவில்லை. அத்தகையதொரு கருத்தியலை மாணவர்கள் மத்தியில் தொடர்ந்தும் பேணுவதாயின் கல்விச் சீர்திருத்தக் கொள்கைகள் நாடுபூராகவும் நடைமுறைப் பொருத்தப்பாடுடைய அறிவியல் பூர்வமான உள்ளடக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.
வேலை உலகை வெல்வதற்கான நவீன உலகின் ஒழுங்குக்கமைய, முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி முகாமைத்துவ முறையில் புத்தாக்கச் சிந்தனைகள் புகுத்தப்பட வேண்டும்.
மிக விசேடமாக, முன்பள்ளிக் கல்விக்கான முக்கியத்துவம் உணரப்படுவதனூடு, முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுவதுடன், முறைமைப்படுத்தப்பட்ட முன்பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் முன்பள்ளிகளை நிருவகிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாண கல்வி அமைச்சுகளின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
க.பொ.த.சாதாரண தரத்தில் ஆங்கில பாடமும் கட்டாய பாடமாக உள்ள நிலையில், ஆங்கில பாடத்திற்காக நீண்டகாலமாக நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதுடன், ஆங்கிலத்தை மாணவர்கள் இலகுவாக கற்பதற்கான முறைமைகளும் கைக்கொள்ளப்பட வேண்டும்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்படை முறைமை (Module System) புதியகல்விச் சீர்திருத்தத்தில் முக்கியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கமைய ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான களங்களாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை முதன்மைப்படுத்துவதன் மூலம் அவற்றின் பாரம்பரியம் மாறாது ஆசிரிய வாண்மைத்துவத்தில் அவை கொண்டுள்ள காத்திரமான வகிபங்கையும் உறுதிசெய்ய முடியும் என்றார்.




