இத்தாலி நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து விபத்து: விமானி உட்பட இருவர் பலி
இத்தாலியின் பிரெஷியா நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானி செர்ஜியோ ராவக்லியா (75) மற்றும் அவரது துணைவியார் ஆன் மரியா டி ஸ்டெபனோ (60) ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தின் காணொளியில், விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிவது பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு கார் ஓட்டுநர்களும் காயமடைந்தனர்.
கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட இந்த அதி-சிறிய ரக விமானம் சுமார் 30 அடி அகலமுள்ள இறக்கைகளைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய, விமானத்தின் பாகங்கள் மற்றும் பராமரிப்புப் பதிவுகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

