வாகனப் பதிவு மோசடி: மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது
சட்டவிரோத வாகனப் பதிவு மோசடித் திட்டம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) திங்கட்கிழமை (ஜூலை 14) அறிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்று தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வாகனம் வழக்கமான நடைமுறைகளை மீறி பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில், தற்போது காணி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் உதவி ஆணையாளர் ஒருவரும் அடங்குவார்.
சட்டவிரோதமான முரண்பாடுகள் இருந்தபோதிலும் குறித்த வாகனத்தின் பதிவுக்கு இவர் அங்கீகாரம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாராஹேன்பிட்டி மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளையின் அபிவிருத்தி உதவி அதிகாரி ஒருவரும், அதே கிளையின் விசாரணை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத பதிவுச் செயன்முறையை இவர்கள் இலகுபடுத்தி அங்கீகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

