பாகிஸ்தான் ராணுவ தளபதி இலங்கை, இந்தோனேசியாவுக்குப் பயணம்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனிர், இந்த மாத இறுதியில் இலங்கை மற்றும் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனிர் ஜூலை 21 அன்று கொழும்புவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பயணத்திற்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு பயணங்களின்போதும், இருதரப்பு நலன்கள் குறித்து விவாதிக்கப்படும் என ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு நீண்டகாலமாகவே உள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இலங்கைக்கு கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. இதில் இராணுவ தளவாடங்கள், வெடிமருந்துகள், பயிற்சி மற்றும் உளவுத்துறைப் பகிர்வு ஆகியவை அடங்கும். இலங்கை விமானப்படையை நவீனமயமாக்குவதற்காக பாகிஸ்தான் JF-17 போர் விமானங்களை இலங்கைக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் முழுமை பெறவில்லை. 2025 ஏப்ரலில் நடைபெற்ற 5வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்பு பேச்சுவார்த்தை, இருதரப்பு இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தியது.
இந்தோனேசியாவுக்கான பயணத்தைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட தொடர்புகள் குறைவாகவே இருந்துள்ளன. இந்த பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா நீண்டகாலமாகவே நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் அவை மேற்கொண்டுள்ளன. இதில் JF-17 தண்டர் போர் விமானத்தின் கூட்டு உற்பத்தியில் இந்தோனேசியா பங்கேற்பதற்கான வாய்ப்பும் அடங்கும். இரு நாடுகளும் பயிற்சி நோக்கங்களுக்காக இராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்வதோடு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் கூட்டு இராணுவ பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.

