பிரேசிலில் நடுவானில் ராட்சத பலூன் தீப்பிடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத பலூன் (hot-air balloon) மூலம் மக்கள் ஆகாயத்தில் பறப்பார்கள்.
பிரையா கிராண்டு என்பது இந்த ராட்சத பலூன் பறப்பதற்கு ஏற்ற இடமாக திகழ்ந்து வருகிறது.
இன்று சான்டா கட்டேரினா மாநிலத்தில் ராட்சத பலூனில் 29 பேர் பறந்து கொண்டிருந்தனர்.
வானில் பறந்து கொண்டிருக்கும்போது பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் பலூன் முழுவதுமாக எரிந்து மக்கள் நின்று கொண்டிருந்த தொட்டி கீழே விழுந்தது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் 21 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை இதுபோன்ற ராட்சத பலூன் விழுந்ததில் 27 வயது பெண் ஒரவர் உயிரிழந்திருந்த நிலையில் 11 பேர் காயம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

