உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 7 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) முடிவு செய்துள்ளார்.
அதன்படி உக்ரைனில் சண்டையிட சுமார் 3 லட்சம் ரஷியர்களை அணிதிரட்ட அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.
அதோடு போரில் மேற்கத்திய நாடுகளால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவும் புடின் எச்சரித்துள்ளார்.
இதனிடையே உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நிறைவு பெற்றதும் ரஷ்ய துருப்புக்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன் இதுபற்றி கூறுகையில்,
“போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்ற மறைமுகமான அச்சுறுத்தல்களுக்கு ரஷ்யா அதிக விலை கொடுக்க நேரிடும்.
ரஷ்யா இந்த கோட்டைத் தாண்டினால் ரஷ்யாவுக்கு பேரழிவு விளைவுகள் ஏற்படும். அமெரிக்கா தீர்க்கமாக பதிலளிக்கும்.
இந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து ரஷ்யாவைத் தடுக்க தேவையானதை நாங்கள் செய்வோம்” என கூறினார்.
இதனிடையே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை வெளியிட்ட சில மணி நேரத்தில் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ரஷ்யா ‘டிரோன்’ தாக்குதல் நடத்தியது.
இதில் துறைமுகத்தில் மிகப்பெரிய அளவில் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில் சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை.