அதிக தொகையைப் வசூலிக்கும் நேர அட்டவணையாளர்கள் – தனியார் பஸ்களின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை
தனியார் பஸ்களின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நேர அட்டவணையாளர்களுக்கும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் இடையில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதன் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனியார் பஸ்களில் நேர அட்டவணையாளர்கள் அதிக தொகையைப் பெறுவதாக பஸ் சங்கங்கள் விசனம் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பஸ் தொழிற்சங்கங்கள் மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு பல தடவைகள் முறைப்பாடு செய்தும் கடந்த சில வருடங்களாக உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
குறுகிய தூர பஸ்களின் நேர அட்டவணையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 500 வழங்க வேண்டும். தொலைதூர சேவை பஸ் ஒன்றின் மூலம் நாளாந்தம் ரூ. 1000 வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு நேர அட்டவணையாளரின் நாளாந்த வருமானம் ரூ. 7,000 முதல் 10,000 வரை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தவுடன், நேர அட்டவணையாளர்களுக்கு மேலதிக பணத்தை வழங்க வேண்டியிருப்பதால், பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என பஸ் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.