கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி போன்று, நபரொருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, வெளிநாட்டில் வாழும் இலங்கையரை வட்ஸ்அப் குரூப் மூலம் ஏமாற்றி பணம் வசூலிக்கும் மோசடி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (24) செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்பவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் மற்றும் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றை அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டில் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி சூம் தொழில்நுட்பத்தினூடாக வெளிநாட்டில் வாழும் இலங்கையைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளதாக சுனில் ஹதுன்நெத்தியின் கையொப்பமிடப்பட்ட போலி விளம்பரம் வட்ஸ்அப் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி செயலுக்கு தனது பெயர், கட்சியின் பெயர் மற்றும் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழும் அப்பாவி இலங்கையருக்கு நிதி மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் என் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இவ்வாறான தீங்கிழைக்கும் செயல்கள் அந்த நம்பிக்கையை நேரடியாகக் குலைத்து, என் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கைக்குக் கேடு விளைவிப்பதாகவும் அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.