கிளிநொச்சி பகுதியில் கடத்தப்பட்ட யுவதி இன்று (18) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் , யுவதியை கடத்திய முக்கிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் அப்பகுதியில் உள்ள வாடகை அறையில் தங்கியிருந்த வேளையில் அங்கு வந்த சிலரால் கடத்தப்பட்டுள்ளார். கடந்த 16ம் தேதி இரவு வேலை முடிந்து வாடகை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போதே வேன் ஒன்றில் வந்த சிலரால் பலவந்தமாக கடத்தப்பட்டார்.
பின்னர் கிளிநொச்சி பொலிசார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது கடத்தப்பட்ட யுவதியை கிளிநொச்சியிலுள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்து விட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபரையும் கடத்தலை மேற்கொண்ட வேனையும் இன்று (18) கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், பிரதான சந்தேக நபர் யுவதியின் உறவினர் எனவும், பெற்றோரின் கடும் எதிர்ப்பு காரணமாக குறித்த யுவதி இளைஞனுடனான காதலை நிறுத்தி, உறவை நிராகரித்தமையினால் மேற்படி கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.