Dr. அர்ச்சுனா மற்றும் கௌசல்யாவுக்கு பிணை

Dr. அர்ச்சுனா மற்றும் கௌசல்யாவுக்கு பிணை
– யாழ். போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்ததாக முறைப்பாடு

– வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ரூ. 1 இலட்சம்பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோர் அத்துமீறி நுழைந்து வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

குறித்த வழக்கு இன்று (16) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது , குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர் மற்றும் சட்டத்தரணி ஆகிய இருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வைத்தியசாலைக்குள் பணிப்பாளரின் அனுமதி இன்றி அத்துமீறி நுழைத்தல், முறைப்பாட்டாளருக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட கூடாது என சந்தேகநபர்களுக்கு அறிவுறுத்திய நீதவான், சந்தேகநபர்களை தலா ரூ. 1 இலட்சம் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.

குறித்த வழக்கினை மேற்கொண்டு நடாத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெறுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதவான் , வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Recommended For You

About the Author: admin