சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமையினால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு கட்சி ஒத்துழைக்காமையினால் கட்சி மீது அதிருப்தி அடைந்தவர்களும் ஈ.பி.டி பி. கட்சிக்கு எதிராக அரசியல் எதிரிகளினால் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கா தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஊடகச் சந்திப்புக்களை நடத்துகின்ற தனிநபர்கள் சிலரினால் ஈ.பிடிபி. கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஈ.பி.டி.பி. கட்சினால் இன்று(11.12.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. அதிகாரத்தில் இருந்த வேளைகளில் பல்வேறு தரப்பினரும், தங்களின் தேவைகள் நிமிர்த்தம் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி இருந்தனர்.
அவ்வாறானவர்களுள் சிலர் தமக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தி, சட்டத்திற்கு முரணாக தங்களுடைய சொந்த பிரச்சினைகளை கையாள முனைந்திருந்தனர்.
எனினும் அதற்கு கட்சியின் தலைமை அனுமதியளிக்காமையினால் கட்சியுடன் அதிருப்தியடைந்தனர்.
அதேபோன்று கடந்த காலங்களில் கட்சி உறுப்பினர்களாக செயற்பட்ட சிலரும் கட்சியின் கொள்கைகளை மீறி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதனால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவ்வாறானவர்களுள் சிலர் சுயநலன்களுக்காக எமக்கு எதிரான அரசியல் தரப்புக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு காலத்துக்கு காலம் பயன்படுத்தப்படுகின்றனர்.
கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றவர்கள், நீதிமன்றத்தினை நாடி கருத்துக்கள முன்வைக்குமளவிற்கு உண்மை தன்மையற்றவர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில், தங்களுடைய குறுகிய நலன்களுக்காகவும், வெகுமதிகளுக்காகவும் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் எதிர் தரப்புக்களுடன் காலத்திற்கு காலம் கைகோர்த்து ஊடகங்களின் முன்பாக தோன்றி வருகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.