“மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்க பெற்றது.
ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த தேர்தல்களுக்கு முன் என்னிடம் நேரடியாக கூறியுள்ளார்.
பல தமிழ் தலைவர்களிடமும் அவர் இந்த கருத்தை கூறி இருப்பதை நான் அறிவேன். இப்போது “மாகாணசபையை அகற்றி விட்டு அதற்கு பதில் நாடு தழுவிய, சம உரிமையை தருவோம்” என தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் கூறுகிறார்கள். சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சம உரிமை என்பது வேறு. அதிகார பகிர்வு என்பது வேறு என்பதை அவர்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபையை அகற்றுவது பற்றி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை, வட மாகாண மாவட்டங்களில் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாக கிடைத்துள்ளமையால், “மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம்” என்ற பழைய ஜேவிபியின் கொள்கை நிலைபாட்டை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு அதை அகற்ற ஆணை தந்துள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தி நினைக்கிறதோ என தெரியவில்லை என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,
”சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சுலபமான காரியம் அல்ல. இன, மத, மொழி ரீதியாக சம உரிமைகள் இந்நாட்டில் உறுதி படுத்த இன்னமும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். இங்கே இன்று அரசியலமைப்பிலேயே, இந்நாட்டின் மொழிகள், மதங்கள் மத்தியில் சம உரிமை உறுதி படுத்தப்படவில்லை. அரச மதமான பெளத்த மதத்துடன் பெளத்த தேரர்கள், இந்நாட்டின் அதிகார மையத்தில் இருக்கிறார்கள். மொழி தொடர்பில் சில பலவீனமான சட்டங்கள் ஆங்காங்கே இருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்த இந்நாட்டின் அரச அதிகார வர்க்கம் இடம் கொடுப்பதில்லை. மொழிகள் மத்தியில் சம உரிமையை அமுல் செய்ய படாத பாடு பட்ட எனக்கு இது நன்கு தெரியும்.
சம உரிமை என்பது வானத்தில் பறக்கும் அழகான பறவை. மாகாணசபை என்பது கையில் இருக்கும் பறவை. வானத்தில் பறக்கும் அழகான பறவையை பற்றி கனவு கண்டுக்கொண்டு கையில் இருக்கும் பறவையை விட்டு விட சொல்கின்றனவா, ஜேவிபியும், தேசிய மக்கள் சக்தியும் என கேட்க விரும்புகிறேன்.
சிங்கப்பூர் சிறிய நிலபரப்பு கொண்ட ஒரு நாடு. ஆகவே அங்கே மாகாணங்களை அமைத்து அதிகார பகிர்வு செய்ய முடியாது. ஆனாலும், அங்கேயும், ஜனாதிபதி பதவி என வரும்போது சீனர், தமிழர், மலாய் என மூன்று இனத்தவர்களும் மாறி மாறி பதவி வகிக்கும் முறையில் அரசியல் சட்டம் இருக்கிறது. அவர்களது அமைச்சரவையில் எல்லா சிங்கப்பூர் இனத்தவரும் இடம் பெறுகிறார்கள்.
நல்லாட்சியின் போது, புதிய அரசியலைமைப்பு உருவாக்கும் முயற்சி நடந்து. அதற்கான வழிகாட்டல் குழுவில் இன்றைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கத்துவம் பெற்று பணியாற்றினார். நானும் வழிகாட்டல் குழுவில் இடம் பெற்றேன். இன்னமும் பல இன, மத, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வழிகாட்டல் குழுவில் அங்கத்துவம் வகித்தார்கள்.
ஆகவே அத்தகைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது, இவை பற்றி சிநேகபூர்வகமாக கலந்து பேசி, வாத, விவாதம் செய்து, தீர்மானங்களுக்கு வரலாம். ஆனால், இப்போதே அவசரப்பட்டு, “மாகாணசபையை அகற்றியே தீருவோம். அது ஜேவிபியின் கொள்கை. அது மாறவில்லை. ஜேவிபியும், தேசிய மக்கள் சக்தியும் ஒன்றுதான்” என ஒருதலைபட்சமாக ஜேவிபியின் பொது செயலாளர் நண்பர் டில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல.” என்றார்.