மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தொடங்க உள்ள ஒரு நாள் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் போது அவர் பங்களாதேஷ் அணியை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஒரு நாள் தொடரில் இருந்து விலகிய அவர் இலங்கையில் இடம்பெறும் T10 லீக்கில் இணையவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிசம்பர் 12 முதல் 22 வரை சிலோன் T10 லீக்கில் அவர் பங்கேற்கிறார், இந்த தொடரில் கோல் மார்வெல்ஸ் அணியில் பிளாட்டினம் வீரராக ஷகிப் அல் ஹசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் அண்மையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
எனினும், சொந்த மண்ணில் தனது கடைசி டெஸ்ட் போட்டியினை ஷகிப் விளையாடுவதாக இருந்தது. இருப்பினும், அவர் பாதுகாப்பு காரணங்களால் அந்தப் போட்டியில் விளையாடவில்லை.
இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் ஃபரூக் அகமது கருத்து வெளியிடுகையில்,
சட்ட ரீதியில் ஷகிப் அல் ஹசன் மீது எந்தவொரு பிரச்னையும் இல்லையென்றால், அவர் தேசிய அணிக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.
ஷகிப் அல் ஹசன் விவகாரத்தில் என்னால் உறுதியாக எந்தவொரு பதிலையும் கூற முடியாது. அவர் விளையாட வேண்டும் என்பதை நானும் விரும்புகிறேன். அவர் அணியில் இடம்பெறாமல் இருப்பது கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடையதல்ல.
அவர் அணியில் இல்லாமலிருக்க காரணம், அவர் சட்டரீதியாக சந்தித்து வரும் வழக்குகள். என்னால் இந்த விடயத்துக்கு எளிதாக தீர்வு தந்துவிட முடியாது.
அவர் மீதான சட்ட ரீதியான பிரச்னைகள் முடிவுக்கு வந்தால், அவரால் மீண்டும் தேசிய அணிக்காக விளையாட முடியும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.