காலாவதியான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட பல களஞ்சியசாலைகள் சுற்றிவளைப்பு !
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தகவல்களை மாற்றி சந்தையில் வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட்டருந்த இறக்குமதி செய்யப்பட்ட கடலை, அரிசி மற்றும் காலாவதியான பேரீச்சம்பழம் களஞ்சியப்படுத்தப்பட்ட பல களஞ்சியசாலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது.
ஆய்வு கூடங்களுக்கு விநியோகிப்பதற்கு தயாரிக்கப்பட்ட 50 லீற்றர் காலாவதியான இரசாயனப் பொருட்களையும் அந்த அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட காரியாலய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி களனி பெத்தியாகொட பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அதிகாரசபை இந்த பொருட்களை கண்டறிந்துள்ளது.
மேலும் கடந்த 28ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளால் பராமரிக்கப்படும் களஞ்சியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, காலாவதியான 4.6 தொன் காய்ந்த மிளகாய்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
காலாவதியான பொருட்களுடன் காலாவதியாகாத பொருட்களை சேமித்து வைப்பது நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குற்றமாகும், என்பதால் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பண்டிகை காலத்தில் காலாவதியான பொருட்கள், தகவல் மாற்றப்பட்ட பொருட்களை சந்தைக்கு அனுப்பும் வர்த்தகர்கள் மற்றும் களஞ்சியசாலைக்காரர்களைக் கண்டறிய மேலதிக சோதனைகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வழங்குனர்களால் அத்தகைய பொருட்களை வழங்கும் போது அவதானமாக இருக்கமாறும், அத்தகைய தகவல்கள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் குறுகிய தொலைபேசி இலக்கமான 1977 க்கு தகவல் வழங்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரியுள்ளது.