ரஷ்யாவின் இராணுவம் ஐரோப்பாவிற்குள் நுழைந்தால் அவர்களுக்கு எதிராக பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என அந்நாட்டின் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் ரொப் மகோவன் (Rob Magowan) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகள் தங்களது ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, போர் நிலைமை தீவிரமடைந்துள்ளது.
மேற்கத்தைய ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைனால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தியிருந்தது.
அத்துடன், உக்ரைனுக்கு உதவ முன்வரும் மேற்கத்தைய நாடுகளையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார்.
இந்நிலையிலேயே, புடினின் படைகள் ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தால் அவர்களை தடுப்பதற்கு பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என ரொப் மகோவன் எச்சரித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.