உயர்தரத்திலான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடனேயே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வழங்கியுள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பை நாம் முழுமையாக நிறைவேற்றுவோம். எமது நாடு பல வருடங்களாக சுகாதார சேவை தொடர்பில் ஆசியாவில் சிறந்த கௌரவத்தை பெற்றிருந்தது.
சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தனர்.
ஆனால் கடந்த காலங்களில் சில மோசமான அரசியல் நடவடிக்கைகளால் சுகாதார சேவையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே மக்கள் எதிர்பார்த்துள்ள உயர் தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கம்” என அவர் மேலும் தெரிவித்தார்.