முதல் வரவு செலவு திட்டத்தில் வரியில் திருத்தம் நிச்சயம்: ஜனாதிபதி உறுதி!

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதில் செலுத்தப்படும் வரியில் திருத்தம் நிச்சயம் வரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

வரவு செலவுத் திருத்தத்தின்படி, அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு குறைந்த வீதமும், குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்கு அதிக வீதமும் கிடைக்கும் என அவர் விளக்கமளித்தார்.

கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற அரசியல் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகப் போவதில்லை என்றும், தான் உறுதியளித்தபடி வரி தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மீள உறுதியளித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி பல பொருட்களுக்கான வரி குறைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் தமது பொருளாதார குழு கலந்துரையாடியதாக தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு வாழும் உரிமையை பெற்றுக்கொடுத்து பொருளாதார இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கூறினார் அவ்வாறு இல்லையெனில், அடையப்பட்ட பொருளாதார இலக்குகள் பயனுள்ளதாக இருக்காது என சுட்டிக்காட்டினார்.

அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்கள் இலட்சியம். நாம் பெறுவது சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வந்த அரசாங்கம். சர்வதேச நாணய நிதியம் எங்களை ஒழுங்குபடுத்திய பல அளவுருக்களை எங்களுக்கு வழங்கியுள்ளது. அதில் ஒன்று, 2025ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் நமது தேசிய வருமானத்தை 15 வீதமாக உயர்த்துவது. இந்த ஆண்டு 13.8 ஆக உள்ளது. அடுத்த ஆண்டு 15 வீதத்தை எதிர்பார்க்கிறோம் என வலியுறுத்தினார்.

இதேவேளை, வங்கிக் கணக்கு ஒன்றை திறக்க முடியாத காரணத்தினால் இன்னுமும் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்தை பயன்படுத்தவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாம் வாழும் நாட்டின் தன்மையை விளக்கிய ஜனாதிபதி, இந்த காரணத்தினால் அஸ்வெசும நலன்புரி திட்டத்தை பயன்பெறாதவர்களுக்கு சரியான தீர்வை வழங்கவில்லை எனின், எவ்வாறான பொருளாதார இலக்குகளை அடைந்தாலும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“அஸ்வெசும வங்கிக் கணக்கிலேயே வைப்பிலிடப்படுகின்றது. அனைத்து அஸ்வெசும பயனாளர்களும் வங்கிக் கண்க்கு ஒன்றை ஆரம்பிப்பது அவசியம்.

இவ்வாறு அஸ்வெசும கணக்கு வைத்துள்ள ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் வங்கிக் கணக்கு ஒன்றை திறக்க முடியாமல் உள்ளனர். இவ்வாறு வங்கிக் கணக்கு திறக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் அடையாள அட்டை இல்லாமையே.

இப்போது அவர்களுக்கு அஸ்வெசும கிடைப்பதில்லை. அதையும் காப்பாற்ற வேண்டும். டிசம்பரில் யாரும் வெளியேற மாட்டார்கள். மேலும் இரண்டு இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மீண்டும் தகுதியானவர்களை தேர்வு செய்ய மேல்முறையீட்டு குழுவை நியமித்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்கும் போது தொலைக்காட்சி அரசியல் நிகழ்வில் கலந்துக் கொள்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin