இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய மொத்த கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறைச்சாலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 180 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கட்டுப்பாடு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலை சில சிறைச்சாலைகளில் 200 மற்றும் 300 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
24,000 பேர் தற்போது சிறைச்சாலையில் உள்ளனர், இருப்பினும் இலங்கையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படக்கூடிய மொத்த கைதிகளின் எண்ணிக்கை சுமார் 13,200 ஆகும்.
அவர்களில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் சந்தேக நபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 7500 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் உள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறைச்சாலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் 2023ம் ஆண்டு அவர்களின் உணவுக்காக அரசாங்கம் சுமார் 4.7 பில்லியன் ரூபாவைச் செலவிட நேரிடும் என சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.