கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார்.
ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து பலஸ்தீன நாட்டை சேர்ந்த ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் பிணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் மீது போரை தொடங்கியது இஸ்ரேல். இருதரப்பிலும் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காஸாவில் தங்கள் இராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷனில் மூன்று முக்கியமான தலைகள் கொல்லப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது. ஹமாஸ் தலைவரும், அக்டோபர் 7 சம்பவத்தின் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவருமான யஹ்யா சின்வரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் தான் லெபனான் நாட்டில் அடுத்தடுத்து அதிரடி தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லாவை இஸ்ரேல் படையினர் கொன்றனர். இதன் தொடர்ச்சியாக, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டுள்ளார். சின்வார் கொல்லப்பட்டதை “இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கியமான சாதனை” என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு மோதல் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் மோஸ்ட் வான்டட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் யஹ்யா சின்வார். காரணம், அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் தான் என்று கூறப்படுகிறது.
சின்வார், கடந்த ஜூலை மாதம் ஈரானில் நடந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்னர் ஹமாஸின் தலைவரானார். தற்போது அவர் கொல்லப்பட்டுள்ளது ஹமாஸுக்கு ஒரு முக்கியமான அடியாகக் கருதப்படுகிறது.
எனினும், இஸ்ரேலின் கூற்றை ஹமாஸ் மறுத்துள்ளது. சின்வார் கொல்லப்பட்டதாக வரும் செய்தி தவறானது என ஹமாஸ் கூறியுள்ளது. “ஹமாஸ் தலைவர்களில் ஒருவரின் “படுகொலை” பற்றி பரப்பப்படும் தவறான செய்திகள் குறித்து வியப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த அறிக்கைகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. ஹமாஸ் அமைப்பை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று ஹமாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நம்பகமான தகவல்களை உறுதி செய்துகொண்டுள்ள நிலையில், ஹமாஸ் தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை நாங்கள் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறோம், ஹமாஸ் அமைப்பினர் எவருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. இந்த வதந்திகள் எங்களை பலவீனப்படுத்தும் எதிரிகளின் முயற்சிகளின் ஒரு பகுதிதான்.” என்றும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலை பொறுத்தவரை பலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை வேரோடு அழிக்கும் வரை ஓய மாட்டோம் என்று திட்டவட்டமாக உள்ளது. இதற்கிடையில் சமாதான பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வருகிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.