ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி இடம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார்.
வலுசக்தி அமைச்சு என்பது நிதி வருமானங்களைப் பெறும் அமைச்சு எனவும், அதிக வருமானம் கிடைக்கும் போது முறைகேடுகள் இடம்பெறலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாகவும் அவர் இதன்போது கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் என்பனவே காரணமாக அமைந்துள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.
அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களும் தங்களின் பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும், அந்தச் சொத்துக்களை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியம்.
அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள் மேற்கொள்ளும் மக்கள்நல அனைத்து செயற்பாடுகளுக்கும் நான் முன்னிலை வகிப்பேன். செய்யக்கூடாத ஒன்றைச் செய்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப் போவதில்லை” என்றார்.

