பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அதிரடி பணிப்பு!
சர்ச்சைக்குரிய 2015 பிணை முறி மோசடி வழக்கு, மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய பொலிஸ் பிரிவுகளுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் மற்றும் 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடத்தப்பட்டு, மறுநாள் பாராளுமன்றத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மரணம் தொடர்பான விசாரணையும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
வெலிகமவில் டபிள்யூ 15 ஹோட்டலுக்கு அருகாமையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மரணத்திற்கு காரணமான டிசம்பர் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.