யார் சொல்வது பொய் ? மக்களை மடையர்களாக்குகிறதா முஸ்லிம் காங்கிரஸ்
என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்திருந்தாலும் சகோதரர் ஹரீஸை வேட்பாளர் பட்டியலில் உள்வாங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. அவ்வாறாக இருந்த போதிலும் கூட கட்சியின் தேசியப் பட்டியலில் அவர் பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. அதையும் நாங்கள் சாதகமாக பரிசீலித்திருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதே நேரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹாரிஸின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான பிரசாரப் பணிகளில் ஈடுபடாமை காரணமாகவே அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதில் யார் சொல்வது உண்மை என மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். குற்றவாளி கூண்டில் செயலாளர் நிஸாம் காரியப்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹாரிஸை நிறுத்தினாலும் கூட தலைவர் ஹக்கீம் தான் கட்சியில் உயர்பதவி வகிப்பவர் என்ற அடிப்படையில் அவர் நிஸாம் காரியப்பரின் பொய்யான கூற்றை மறுதலித்து அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் வேண்டுகோளுகிணங்கவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் பெயர் நீக்கப்பட்டதாக கூறியிருப்பது ஹரீஸ் மீதான உண்மைத்தன்மையை வெளிக்காட்டியுள்ளது.
குருடன் யானை பார்த்த கதைபோல அறிக்கை விட்டிருக்கும் நிஸாம் காரியப்பரின் கண்ணுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் பிரச்சார பொதுக்கூட்டங்களில் முன்னாள் எம்.பி ஹரீஸ் கலந்து கொண்டதுடன் தனது தலைமையில் தனது தொகுதியில் பிரமாண்ட மக்கள் வெள்ளத்தை கூட்டி கூட்டங்களை கூட நடத்தி காட்டியிருந்ததுடன் சிறிய கூட்டங்கள், பரப்புரைகள், வீட்டுக்கு வீடு வாக்கு சேகரிக்கும் பணி என்று முழுமூச்சாக களத்தில் நின்று பணி செய்து தனது தொகுதியை வென்றும் காட்டினார் என்பது தெரியாமல் போனது எப்படி.
ஏனைய வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்பு செய்யாத காரணத்தினால் இறுதி நேரத்தில் சகோதரர் ஹரிஸ் அவர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்படுவதில் தடங்கள் ஏற்பட்டது என்று கூறியுள்ள அவர் ஹரீஸ் அவர்களுக்கு தேசிய பட்டியலில் இடம் வழங்கவும் முன்வந்துள்ளார். குற்றங்கள் செய்தவருக்கு தலைவர் எப்படி தேசிய பட்டியல் வழங்குவது? மக்களை இவர்கள் மடையர்கள் என எண்ணிக்கொண்டு நடக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
(வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஆதரவு மேடையில் நிஸாம் காரியப்பர், ரௌப் ஹக்கீம், ஹரீஸ் ஆகியோர் அமர்ந்திருக்கும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.)