ஆண்கள் எவரும் துணியாத நிலையில் சுமந்திரனின் சூழ்ச்சியை பகிரங்கப்படுத்திய ‘தமிழரசின் வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணி
”ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் சஜித் ஆதரவு முடிவை ஏற்காத தமிழரசுக் கட்சி விசுவாசிகளும் தமிழின உணர்வாளர்களும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் பழிவாங்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு சுமந்திரனின் விசுவாசிகளும் அல்லைக்கைகளும் மத ரீதியானவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் தனதும் கிழக்கில் தனது விசுவாசியான சாணக்கியனதும் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமனங்கள் இடம்பெற வேண்டுமென்பதில் சுமந்திரன் சகுனித்தனத்துடன் செயற்பட்டுள்ளார். இதனால் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் ”வீட்டிலிருந்து” வெளியேறி வருகின்றனர்”
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலில் ”வீட்டுக்குள்” ஏற்பட்ட மோதல் இலங்கை தமிழரசுக்கட்சி என்ற குடும்பத்தின் ஒற்றுமையை,பலத்தை ,நம்பகத் தன்மையை ,எதிர்பார்ப்பை சீரழித்ததுடன் , அதனைத் தொடர்ந்து இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில்போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவில் இடம்பெற்ற சர்வாதிகாரம் மற்றும் பழிவாங்கல்களினால் தமிழரசுக்கட்சி குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியேறி வருவதனால் ‘வீடு”காலியாகி வருகின்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் சிறீதரனிடம் படுதோல்வியடைந்த சுமந்திரன் அந்த தோல்வியை தாங்க முடியாது ‘எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரு கண்களும் போகவேண்டும்”என்ற சிந்தனையில் தமிழரசுக்கட்சிக்குள் ”தடுமாறும்” மூத்த தலைவரையும் தனது ”அல்லக்கை ”செயலாளரையும் வைத்துக்கொண்டு நடத்திவரும் ஈகோ.சர்வாதிகார சதிராட்டத்தினால் தான் இன்று தமிழரசுக்கட்சி இருந்த இடம் தெரியாமல் போகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் சஜித் ஆதரவு முடிவை ஏற்காத கட்சி விசுவாசிகளும் தமிழின உணர்வாளர்களும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தெரிவில் பழிவாங்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு சுமந்திரனின் விசுவாசிகளும் அல்லைக்கைகளும் மத ரீதியானவர்களும் உள்வாங்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் சுமந்திரனின் சர்வாதிகாரம் தலைதூக்கியிருந்த நிலையிலேயே கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் வீட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி வேட்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீதரன் ,எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறீதரனைத் தவிர மிகுதிப் பேர் சுமந்திரன் விசுவாசிகள்.
இந்த வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அறிவிக்கையில்,யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரனும் நானும் போட்டியிடுவதுடன், ஏனைய 7 பேரும் புதியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் இருவர் பெண் வேட்பாளர்கள்.
மிகவும் துடிப்பான இரு பெண்களையும் இம்முறை நிறுத்தியுள்ளோம். பெண் வேட்பாளர்கள் தேவை என நாம் ஊடகங்களில் தெரிவித்தோம். பெண் வேட்பாளர்களுக்கு காடு மேடு.மலையென அலைந்தோம். இறுதியில் எமது கோரிக்கையைப் பார்த்து இருவர் காலை விண்ணப்பித்தனர்.(வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட தினம்)அவர்கள் இருவருக்குமே வாய்ப்பை கொடுத்துள்ளோம் எனக் கூறியிருந்தார்.
அதேபோன்றே மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஞா.சிறிநேசன் எமது கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், மட்டு மாநகர முன்னாள் மேயர் தி.சரவணபவன், வைத்தியர் சிறிநாத் உள்ளிட்ட ஐவர் இறுதி செய்யப்பட்டுள்ளனர். ஏனைய மூவரையும் மாவட்ட கிளையுடன் கலந்துரையாடி இறுதி செய்வோம். வன்னி, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட பட்டியல் இறுதி செய்யப்படவில்லை எனவும் அப்போது தெரிவித்திருந்தார்
சுமந்திரனைப் பொறுத்தவரையில் வடக்கில் தனதும் கிழக்கில் தனது விசுவாசியான சாணக்கியனதும் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமனங்கள் இடம்பெற வேண்டுமென்பதில் சகுனித்தனத்துடன் செயற்பட்டுள்ளார் என்பது வேட்பாளர்கள் பட்டியலை பார்க்கும் போது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சிறீதரனை வேட்பாளர் பட்டியலில் இணைக்காமலிருக்க சுமந்திரன் தலைகீழாக நின்றபோதும் சிறீதரனின் வாக்குப்பலம் காரணமாக அது முடியாத நிலையிலேயே அவரை மட்டும் பட்டியலில் சுமந்திரன் இணைத்துள்ளார். அதேவேளை சிறீதரனை தோற்கடிப்பதற்கான ”உள்வீட்டு” சூழ்ச்சிகளையும் செய்துள்ளார்.
இதேவேளை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. எல்லா விடயங்களிலும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற சுமந்திரனின் ஆட்டம் இனி முடிவுக்கு வரும் என்று தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி எச்சரிக்கை விடுத்து சுமந்திரனின் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரத்தனமாக இடம்பெற்றுள்ளது என்பதனைனையும் பெண் வேட்பாளர்கள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய் என்பதனையும் வெளிப்படுத்தியுள்ளது தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஊடக சந்திப்பை நடத்தியே வேட்பாளர் தெரிவில் நடந்த சுமந்திரனின் சூழ்ச்சியை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
”எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது. இந்த பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் என பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார். எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார் ?
எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்கு துதிபாடுபவர்களை வேட்பாளர்களாக சுமந்திரன் நிறுத்தியுள்ளார். அப்படியாயின் முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்? இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடு பவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார்.எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார். முன்னர் விண்ணப்பித்தவர்களை புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக் கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” என்று இந்த ஊடக மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவி குற்றம்சாட்டியுள்ளார் .இந்தக் குற்றச்சாட்டுக்கு சுமந்திரனிடமிருந்து இன்றுவரை பதிலில்லை.
இந்த இரு பெண் வேட்பாளர்கள் தொடர்பில் இன்னொரு சந்தேகமும் உள்ளது. அதாவது ”பெண் வேட்பாளர்களுக்கு காடு மேடு.மலையென அலைந்தோம். இறுதியில் எமது கோரிக்கையைப் பார்த்து இருவர் காலை விண்ணப்பித்தனர். அவர்கள் இருவருக்குமே வாய்ப்பை கொடுத்துள்ளோம் இந்த இருவர் பெண் வேட்பாளர்களும் மிகவும் துடிப்பானவர்கள் என சுமந்திரன் கூறியிருந்தார்.
காலையில் விண்ணப்பித்தவர்களை உடனடியாகவே வேட்பாளர்களாக நியமித்த சுமந்திரனுக்கு அவர்கள் மிகவும் துடிப்பானவர்கள் என்பது எவ்வாறு தெரியும்.?அவ்வாறு முதலிலேயே தெரிந்திருந்தால் அவர்கள் பெயர்களை முதலிலேயே சுமந்திரன் பிரேரித்திருக்கலாம்தானே ?அடுத்ததாக யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் இம்முறை தமிழரசுக்கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைக்கக்கூடிய அரசியல் கள சூழலில் தனது போட்டியாளரான சிறீதரனின் வாக்குகளை சிதறடிக்கவே அவரின் பெயருடன் கூடிய கிருஸ்ணவேணி சிறிதரன் என்ற வேட்பாளரை சுமந்திரன் தெரிவு செய்துள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவு தொடர்பில் சுமந்திரன் கூறுகையில், இம்முறை ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு இடம் வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவ்வாறானால் ஏற்கனவே போட்டியிடாத கட்சியின் முக்கியஸ்தரான ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசாவின் வேட்பாளர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏன்? தனது வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அறிவித்துள்ளார் .
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டத்தரணி தவராசா விடுத்துள்ள அறிக்கையில், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போது அதில் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தினுடைய மற்றும் கொழும்பு வாழ் மக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக தான் விண்ணப்பத்தை கொடுத்திருந்ததாகவும், அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காக தொடர்ச்சியாக பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்கு பொறுப்புச் சொல்ல முடியாத ஒரு கட்டத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீரத்தின் பால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று சோர்விழந்து சோரம் போகின்ற ஒரு ஆபத்தான நிலையில் இருக்கின்ற படியினால் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நான் விலகுகின்றேன்.தமிழ் தேசிய விரோதிகளின் கைகளுக்குள் சிக்குண்ட தமிழரசு கட்சியில் தொடர்ந்தும் பயணிப்பது பொருத்தமற்றது என்பதால் இந்த முடிவு எட்டப்படுகிறது.தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டு தமிழரசு கட்சி சின்னாபின்னமாகி இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் பயணிக்க முடியாது.
தேசியத்தை கண்முன்னாலே குழி தோண்டி புதைக்கின்ற செயற்பாடுகளுக்கு துணை போகின்ற வரலாற்று துரோகத்தை நான் செய்ய தயார் இல்லை என்பதால் தமிழரசு கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.தமிழ் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்ட என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்குண்டான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்கு முடிவெடுத்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து சட்டத்தரணி தவராசா,முன்னாள் எம்.பி. சரவணபவன் ,முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் சுயேட்சையாக களமிறங்குகின்றனர்.
தவராசாவைப் போன்றே தமிழரசு கட்சிக்காக பலவழிகளிலும் தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் தமிழரசுக் கட்சியில் இருந்தும், இதுவரை தமிழரசுக் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் தமிழரசுக் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் சிலர் கட்சிக்குள் இருக்கும் வரை மீண்டும் கட்சியோடு இணைந்து செயற்படப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.
இவர்கள் எல்லோருக்கும் மேலாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா அறிவித்ததுடன் கட்சியின் தலைவர் பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு பழம்பெரும் கட்சியும் தமிழர்களின் தாய் கட்சியுமான தமிழரசுக் கட்சி ”சாத்தான்”புகுந்த வீடாக மாறியுள்ளதால் அந்த சாத்தான் வீட்டிலிருந்து பலரும் வெளியேறுகின்றனர். இதனால் தமிழரசுக்கட்சி மட்டுமல்ல தமிழ் தேசியத்தின் பலமும் அழிக்கப்படுகின்றது. ஆயுத ,அரசியல் பலத்தில் அசைக்க முடியாதவர்களாகவிருந்த தமிழினம் காட்டிக்கொடுப்புகளினால் ஆயுத பலத்தை இழந்த நிலையில் தற்போது ”உள்வீட்டு சதி” களினால் அரசியல் பலத்தையும் இழந்து வருகின்றது.