எதிர்வரும் 2028ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் கடனை செலுத்துவதற்கும், நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை தமது அணியிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கெஸ்பெவ பகுதியில் நேற்று தமது கட்சியின் ஆதரவாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத் தேர்தலினூடாக எமக்கு அதிகாரத்தை வழங்குவது மிகவும் பொருத்தமானதாகும். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் நிபுணத்துவம் வாய்ந்த தரப்பினர் எமது அணியில் உள்ளனர்.
2028ஆம் ஆண்டிலிருந்து கடன் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நீண்ட கால எல்லையில்லை குறிப்பாக இன்னும் 4 ஆண்டுகள் மாத்திரமே உள்ளன.
சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இந்த சிறிய இடைவெளியில், போதுமானளவு அந்நிய செலாவணி கையிருப்பு எம்மிடம் இருக்க வேண்டும். அதற்குச் சிறந்த பொருளாதார கொள்கையிருக்க வேண்டும்.
எனவே ஐக்கிய மக்கள் சக்தியே அதனைச் சிறந்த வகையில் நிர்வகிக்கும். நாட்டு மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாமல், சர்ச்சைகள் இன்றி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பயணத்தில் நாட்டை வழிநடத்த வேண்டும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.