இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், 2024 செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை
இலங்கை நிராகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன் சாட்சிகளைத் திரட்டும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாதிருக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.