இலங்கைக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கத்துவம்?

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அங்கத்துவம் பெறும் இலங்கையின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இம்முறை ரஷ்யாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ புதிதாக ஜனாதிபதியொருவர் பதவியேற்றவுடன், அயல் நாடு என்ற வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்கு வருகைத் தருவது வழமையான விடயமாகும்.

அந்தவகையில்தான், கடந்தவாரமும் அவர் நாட்டுக்கு வருகைத் தந்திருந்தார்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவுக்கு வருகைத் தருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதேபோல், இந்திப் பிரதமருக்கும் நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டது. இருநாட்டுக்கு இடையிலான பொருளாதார, இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், வடக்கில் மீனவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

மீனவர்களின் பிரச்சினையானது, இரண்டு தரப்பையும் பெரிதாக பாதிப்பதால், ஒக்டோபர் 29 ஆம் திகதி இருநாட்டு மீனவ அமைச்சுக்களுக்கும் இடையிலான 6 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.

அதேபோன்று, பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை தீவிரமாக முயன்று வருவதோடு இந்த விடயத்தில் ஆதரவு வழங்குமாறும் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதற்கும் இந்திய தரப்பிலிருந்து சாதகமான முடிவுகளே வந்துள்ளன” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
…………………..
பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டமைப்பின் அங்கத்துவம் பெறுவதற்கான இதற்கான விண்ணப்பம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒக்டோபர் 22 முதல் 24 ஆம் திகதிவரை ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க

இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய தேர்தல் காலம் காரணமாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே, கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை தரப்பிலிருந்து இந்தியாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பிற்குள் தனது நிலையை வலுப்படுத்த இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த நடவடிக்கை குறிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் அமைப்பான பிரிக்ஸ், வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள செல்வந்த நாடுகளின் பொருளாதார மேலாதிக்கத்தை சவால் செய்யும் வகையில் நிறுவப்பட்டது.

அத்தோடு, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய புதிய உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த பிரிக்ஸ் அமைப்பு அண்மையில் விரிவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin