“செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு”
பிணைமுறி மோசடியின் மூலகாரணத்தை கண்டறியும் வரை இந்த நாட்டில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை என முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் தாம் பேசியிருந்ததாகவும் பிணைமுறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவித்திருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலர் புண்ணாக்கு சாப்பிடுவதாகவே சொல்லுவார்கள். இவ்வாறானதொரு நாட்டில் அரசியல் செய்வது புரியாத செயல் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் தான் நிரபராதி என்பது உறுதியாகத் தெரியவந்தால்தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த ஊழல் நெருக்கடிகள் தீர்ந்தால்தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் பங்கேற்பது உறுதியாகும் என்றார்.