முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த இரண்டு பெண்களில் ஒருவர் தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி மூவரிடம் தலா 5 இலட்சம் வீதம் 15 இலட்சம் ரூபாவும், இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பிறிதொரு நபரிடம் 730,000 ரூபாவும் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் உறுதியளித்தபடி வௌிநாட்டில் தொழில் வழங்கப்படவில்லை என பணியகத்திற்கு கிடைத்த 4 முறைப்பாடுகள் தொடர்பில் கண்டியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு அதிகாரிகளால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வழக்கு ஒன்றுக்காக 10 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டு மற்றும் 4 வழக்குகளுக்காக தண்டனை அறிவிக்கப்பட்டு பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாடுகள் பணியகத்திற்கு தொடர்ந்து கிடைத்து வருவதாகவும், முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.