”ராஜபக்ஷவினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்ட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியினர் ராஜபக்ஷ தரப்பினர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நாட்டின் அரசில்வாதிகள் கள்வர்கள் என்றும் ஊழல்வாதிகள் என்றும் கடந்த காலங்களில் கூறிவந்தனர்.
அதனாலேயே நாடு இன்னும் முன்னேற்றமடையவில்லை எனவும் நாடாளுமன்றிலும் பொது வெளியிலும் தெரிவித்துவந்தனர். தேசிய மக்கள் சக்தியினர் தற்போது இந்த நாட்டின் ஆட்சியாளர்கள். எனவே அவர்கள் ஊழல்வாதிகளையும் கொள்ளையர்கள் என கூறியவர்கள் தொடர்பாக குற்றச்சாட்டினை நிரூபிக்க வேண்டும்.
குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்து அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபக்ஷ தரப்பினர் கடந்த காலங்களில் உகண்டாவில் பணத்தினை மறைத்துவைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்திருந்தனர். தற்போது அதிகாரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
எனவே இந்த குற்றச்சாட்டினை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தேசிய மக்கள் சக்தியினர் ஊழல்வாதிகளை கைது செய்வதாகவும் கள்வர்களை கைது செய்வதாகவும் கூறியே தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர்.
பொதுத்தேர்தலிலும் அவர்கள் இதனையே கையாளவுள்ளனர். தேசிய மக்கள் சக்தியினர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்காவிட்டால் இவ்வாறான விடயங்களுக்கு பின்புலமாக அவர்களே செயற்பட்டார்கள் என்பதை மக்கள் எண்ணுவார்கள்” இவ்வாறு சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.