27 ஆண்டுகால தோல்வி வரலாற்றை புதுபித்து தொடரை வென்றது இலங்கை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

இதன்மூலம், 27 வருடகால இந்தியாவுடனான தோல்வி வரலாற்றையும் இந்த வெற்றியின் ஊடாக இலங்கை புதுபித்துள்ளது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று புதன்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் ஒருபோட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

முதல் போட்டி வெற்றியின்றி முடிவடைந்ததாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியையே பெற்றிருந்தது.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது தீர்மானமிக்க போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் சார்பில் அவிஷ்க பெர்ணான்டோ 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், பத்தும் நிஷங்க 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

249 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி இலங்கை வீரர்களின் சுழல் பந்துவீச்சால் திணறினர்.

எந்தவொரு வீரராலும் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்களான துனித் வெல்லாலகே மற்றும் ஜெப்ரி வென்டசேயின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது போனது.

இறுதியில் இந்தியா அணி 26.1 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 35 ஓட்டங்களையும் வாஷிங்டன் சுந்தர் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அபாரமாக வீசிய துனித் வெல்லாலகே ஐந்து விக்கெட்டுகளையும், ஜெப்ரி வென்டசே இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றிக்கொண்டது.

இந்த வெற்றியானது 1997ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடர் ஒன்றை வெற்றிக்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக அமைந்தது.

இலங்கை அணியின் இந்த அபார வெற்றியை இலங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin