பொது வேட்பாளர் யார்?: வவுனியாவில் இன்று முடிவு

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன், அரியநேத்திரன், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இடம்பெற்றுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் ஏழு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து “தமிழ் மக்கள் பொதுச் சபையை” ஏற்படுத்தியிருந்தன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூலை 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் கையெழுத்திட்டன.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அதில் சந்திரநேரு சந்திரகாந்தன், தவராசா, அரியநேத்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, அரசியல் கட்சிகள் சாராதவராகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகவும் வேட்பாளர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேடல்கள் இடம்பெற்றன.

பின்னர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் சார்பற்ற ஆணாக இருந்தாலும் போதுமானது என்ற அடிப்படையில் தேடப்பட்டபோதும் பொருத்தமானவர்களை அடையாளம் காண முடிந்திருக்கவில்லை.

அதனையடுத்து வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அதுவும் பலனளிக்கவில்லை.

அதனையடுத்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்பினர் பிரதிநிதிகளைக் கோரியபோதும் அவர்களும் பின்னடித்தனர்.

இதற்கிடையில் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் சம்பந்தமாகவும் இணக்கப்பாடற்ற நிலைமைகள் உருவெடுத்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை களமிறக்குவதாக இருந்தால் கட்சிகளில் தங்கியிருக்கத் தேவையில்லை என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் மேற்படி நபர்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து வவுனியாவில் இன்று கூடி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin