குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

இலங்கையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (சுயாதீன வேட்பாளர்), எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணி சார்பில் அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரும் களமிறங்கவுள்ளனர்.

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் ஆகியோரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்தி ரத்ன சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிட்டார்.

அனினவ நிவஹால் பெரமுன என்ற கட்சி சார்பில் போட்டியிடுவற்கு ஓசல லக்மால் அனில் ஹேரத் என்பவரும், இலங்கைத் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எஸ்.ஜி.லியனகே என்பவரும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இது தவிர வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது வேட்பாளரையும் நிறுத்தவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியும் கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்தவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளார். ஐக்கிய சோசலிசக் கட்சியின் சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும் களமிறங்கவுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin