கனடாவில் உயிரிழந்த இலங்கை மாணவி

கனடா கொங்கோடியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயால் அவதியுற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவத்துள்ளனர்.

இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர் , குருணாகலை தொரடியாவ மல்லவபிடியவில் வசிக்கும் 29 வயதுடைய டபள்யூ.எம். மாஷா விஜேசிங்க எனும் திருமணமான பட்டதாரி மாணவி ஆவார்.

அவர் கனடா கொங்கோடியா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்து வந்த நிலையில் கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி தனது கணவருடன் இலங்கைக்கு வந்து புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் பேராதனை பல்கலைக்கழத்தின் பட்டதாரி மாணவியும் ஆவார்.

அதனைத் தொடர்ந்து, அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த வேளையில் மேலதிக கற்றல் நடவடிக்கைகளுக்காக கனடா சென்றுள்ளார்.

அவருடைய கணவர் தனியார் கையடக்கத் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக கடமையாற்றி வருகிறார்.

உயிரிழந்த மாணவியின் தந்தை விவசாய அமைச்சில் சிரேஷ்ட ஆலோசகராகவும், தாயார் இப்பாகமுவ தேசிய பாடசாலையில் விவசாய ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக கனடாவுக்கு தனது கணவருடன் சென்று அங்கு தங்கியிருந்தார். அப்போதும் அவர் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது தந்தை தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் கனடாவில் கொங்கோடியா பல்கலைக்கழகத்தில் இணைந்த எமாஷா, தனது நோய் நிலைமை அதிகரித்தமையால் மீண்டும் இவ்வாண்டின் நடுப்பகுதியில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

கனடா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பு தொடர்பிலான ஒரு ஆராய்ச்சிக்காக அவர் முன்வைத்த வங்கிச் சேவையை எளிதாக்குவதற்கான மென்பொருளை வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் தனது சிறப்புப் பங்களிப்பை வெளிப்படுத்த அவர் கடுமையாக உழைத்துள்ளார் .

இதேவேளை, தனது கல்வி நடவடிக்கைகளில் பல திறமைகளை வெளிப்படுத்திய இந்த மாணவி, தனது அறிவை மேம்படுத்துவதில் பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது குருணாகல் தொரட்டியாவ மல்லவபிட்டிய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக் கிரியைகள் குருணாகலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மற்றும் கனடா கொங்கோடியா பல்கலைக்கழகத்திலும் தனது நற்பெயரை அவர் வெளிப்படுத்தி வந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin