கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள்

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி.சசிதரன் கையொப்பமிட்டு அரசாங்கத்திற்கு மிக அவசரமான வேண்டுகோளை கடிதமாக முன் வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில்,கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் பதினாறு நாட்களாக தெருவில் நின்று பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றவர்கள் போராடுகின்றனர்.

இவர்கள் எம்மிடம் கற்ற பிள்ளைகள். இவர்களுக்கு நாம் கற்பித்ததன் நோக்கம் இவர்கள் பல்கலைக்கழகம் சென்று தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென்பதற்காகவே.

ஆனால் பல்கலைக்கழக பட்டம் பெற்ற இவர்கள் வேலைவாய்ப்பின்றி தெருவில் நின்று போராடுவதென்றால், பல்கலைக்கழக பட்டத்தை வைத்து என்ன செய்யமுடியும்? அவ்வாறெனில் பல்கலைக்கழகங்கள் ஏன் பட்டங்களை வழங்குகின்றன? இந்த நாட்டில் பல்கலைக் கழகங்கள் எதற்காக? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் துறை சார்ந்த பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. மாணவர்கள் குறித்த பாடங்களை குறிப்பிட்ட வகுப்புகளில் கற்காமலேயே அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வகுப்பேற்றம் செய்யப்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் நிறையவே உள்ளன. வழங்கப்படவேண்டிய நியமனங்களும் முறைகேடுகளால் இழுத்தடிக்கப்படுகின்றன.

ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் ஆசிரிய பற்றாக்குறையுள்ள மாகாணமாக கிழக்கு மாகாணமே உள்ளது.
ஆகையால் பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்து தகுதியோடு இருக்கும் பிள்ளைகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள். இல்லையேல் இனிவரும் தலைமுறை பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் மனோநிலையில் இருந்து விலகி அரச இலவச நிவாரணம் பெறும் பட்டியல்களுக்குள் சேரும் நிலை உருவாகும்.

விசேடமாக எமது அடுத்த தலைமுறைக்கான கல்வி இழக்கப்படும் நிலையைத் தவிர்க்க இந்த பட்டதாரிகளுக்கு வெற்றிடமாக உள்ள பாடத்துறைகளுக்கு உடனடியாக ஆசிரிய நியமனத்தை வழங்குங்கள்.

இல்லையேல் இவர்களோடு நாமும் சேர்ந்து எமது பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைத் தாருங்கள் என போராடும் நிலை ஏற்படும். எதுவானாலும் இவர்களின் நியாயமான போராட்டத்தை நாமும் ஆதரிப்பதோடு அவர்களின் நியமனத்திற்காகக் குரல் கொடுப்போம் -இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin