உக்ரெய்னுக்கு ஐந்து புதிய மூலோபாய வான் பாதுகாப்பு தொழினுட்ப உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
வோஷிங்டன் டிசிக்கு நேட்டோ தலைவர்களை வரவேற்று ஆற்றிய உரையில் அவர் இந்த உறுதியினை அளித்துள்ளார்.
இடைவிடாத ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ளவதற்காக இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் காரணமாக அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகின்ற நிலையில் உக்ரெய்னுக்கு உதவும் வகையில் ஏவுகணை உள்ளிட்ட உதவிப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியாவுடன் அமெரிக்கா இணையும் என்றும் பைடன் தெரிவித்தார்.
ரஷ்ய ஏவுகணையொன்று உக்ரெய்ன் தலைநகர் கிவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையை தரைமட்டமாக்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மிகவும் மோசமான தாக்குதல் இதுவெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நாடு முழுவதும் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் சுமார் 43 பேர் உயிரிழந்தனர்.
மேலம் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனாலும் இந்த தாக்குதலை ஏற்க ரஷ்யா மறுத்தது.மாஸ்கோ மீது பழி சுமத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தது.