சப்ரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் 3 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ;
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியை சந்தித்து பாரியளவிலான மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு பெற்றுக்கொண்டவர்களை பெயர் வாரியாக என்னால் பட்டியலிட்டு குறிப்பிட முடியும்.
சிலர் மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் மகன்களுக்கும் இதனை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
அத்துடன், நகரசபை மற்றும் பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடி 25 இலட்சம் ரூபா பணம் செலுத்தப்பட்டு அமைச்சர் ஒருவரின் கைகளுக்கு 3 கோடி ரூபா சென்றுள்ளது என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
சப்ரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரே இந்த பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு நாடளாவிய ரீதியில் 1028 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் 3 ஆயிரம் கோடி ரூபா பணம் கைமாற்றப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலை” எனத் தெரிவித்துள்ளார்.