இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முன்வைத்திருக்கும் யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டு உள்ளது.
அந்தப் பிணைக்கைதிகளில் இராணுவ வீரர்களும் சில ஆடவர்களும் அடங்குவர்.
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் முதற்கட்ட உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட 16 நாள்கள் கழித்து புதிய யோசனையை ஹமாஸ் ஏற்றிருப்பதாக அந்தப் போராளிக் குழுவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஜூலை 6ஆம் திகதி கூறினர்.
உடன்பாட்டில் கையெழுத்திடும் முன்பு நிரந்தர போர்நிறுத்தத்திற்கு முதலில் இஸ்ரேல் உடன்பட வேண்டும் என்று இதற்கு முன்னர் தான் விதித்து இருந்த நிபந்தனையை ஹமாஸ் இப்போது கைவிட்டு உள்ளது.
முதல் ஆறுவார கட்டத்தின் வாயிலாக அதனை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையை அக்குழு அனுமதிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் கூறியது.
பேச்சுவார்த்தை ரகசியமானது என்பதால் யார் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார் என்பதை அந்தச் செய்தி நிறுவனம் அடையாளம் காட்டவில்லை.
அமெரிக்கா தெரிவித்து இருக்கும் யோசனையை இஸ்ரேலும் ஏற்றுக்கொண்டால் கட்டமைப்புடன் கூடிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த வழிபிறக்கும் என்று பாலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸாவில் நடைபெற்று வரும் ஒன்பது மாத காலப் போரும் ஒரு முடிவுக்கு வரும் என்றும் அமைதிப் பேச்சுக்கு நடுநிலை வகிக்கும் அனைத்துலக முயற்சிகளை அறிந்த அந்த அதிகாரி கூறினார்.
உடன்பாட்டை எட்டுவதற்குத் தோதான வாய்ப்பு கனிந்துள்ளதாக இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பது மாத காலப் போரை நிறுத்துவதில் இதற்கு முன்னர் காணப்பட்ட நிகழ்வுகளில் இது மாறுபட்டது என்றும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹமாஸ் தெரிவித்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று இஸ்ரேல் இதற்கு முன்னர் கூறிவந்த நிகழ்வுகள் அவை.
அமெரிக்க யோசனை பற்றி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் பேச்சாளரிடம் கேட்கப்பட்டதற்கு அவரிடம் இருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை.
பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடரும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்த அவரது அலுவலகம், இருதரப்புக்கும் இடையிலான இடைவெளி இன்னும் நீடிப்பதையே வலியுறுத்தியது.