உமா குமரன்?: வெற்றியும், பின்னணியும்

பிரித்தானிய பொது தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தொழிற்கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்து 14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கவுள்ளது.

தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இதன்மூலம் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் இலங்கையை விட்டு வெளியேறி ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சமடைந்த தம்பதியரின் மகள் உமா குமரன் பிரித்தானிய பாரளுமன்றிற்கு தெரிவாகியுள்ளார்.

லண்டனில் பிறந்து வளர்ந்த உமா குமரன் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவரின் பெற்றோர் இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தொழிற்சங்கங்களுடன் ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

1980களில் லண்டனுக்கு புலம்பெயர்ந்திருந்தனர்.

தொழிலாளர் கட்சியின் உறுப்பினரான உமா குமரன் 19,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது எதிர் வேட்பாளரை தோற்கடித்தார்.

14 மாதங்கள் தேசிய சுகாதார சேவையின் நிபுணர்களுக்காகப் பணிபுரிந்த உமா குமரன், தொழிற்கட்சி எம்பி டான் பட்லரின் பாராளுமன்ற ஆராய்ச்சியாளராகவும், சட்டத்தரணியாகவும் இருந்துள்ளார்.

மேலும் அவர் 2010 இல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார். 18 மாதங்களுக்கும் மேலாக தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராகவும் அவர் இருந்துள்ளார்.

“ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வாழ்க்கையின் மரியாதை. என் மீதும், தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.

நான் எப்போதும் உங்கள் குரலாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன்,” என்று அவர் தனது வெற்றிக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

லண்டனில் கணிசமான தமிழ் மக்கள் உள்ளனர், அவர்களில் பெரும் பகுதியினர் போரின் போது நாட்டை விட்டு வெளியேறி அங்கு குடியேறிய இலங்கைத் தமிழர்கள் ஆவர்.

கடந்த மாதம் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனது குடும்பம் மற்றும் பெற்றோர் மூலம் தனது உழைப்பு மதிப்புகள் தனது ரத்தத்தில் ஆழமாக ஓடுவதாக உமா குமரன் கூறியிருந்தார்.

“எனது தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்கவாதிகளில் ஒருவர். என் கொள்ளுத்தாத்தா, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உரிமை கோரி தொழிற்சங்க மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரை தற்காலிகமாக வீட்டை விட்டு வெளியேற்றினார்.

எனது தாத்தாக்கள் இருவரும் அரசு ஊழியர்கள், எப்போதும் பொது சேவை உணர்வுடன் இருந்தவர்கள்.” என்று அவர் கூறினார்.

இதேவேளை, உமா குமரனின் வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் முதலில் வாழ்த்து தெரிவித்தார்.

“ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண்மணியாக தெரிவாகியுள்ள உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீங்கள் தமிழ் சமூகத்திற்கு பெரும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.” என தமிழக முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin