பிரிட்டனில் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 4) பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் 15 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு ஏற்படும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து அந்தக் கட்சியில் ரிஷி சுனாக் தற்போது பிரதமராக உள்ளார்.
யாரும் எதிர்பாராதவிதமாக ஆறு மாதங்களுக்கு முன்பே ரிஷி சுனாக் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அவரது இந்த முடிவு அவருக்கே பாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
ஆறு வாரப் பிரசாரத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அவரது கட்சி பின்னடவைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர், நாடாளுமன்றத்தில் ஆகப்பெரிய கட்சியின் தலைவராக உருவெடுப்பார் எனச் சொல்லப்படுகிறது.
2005ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய நேரடிப்படி இன்று வெள்ளிக்கிழமை விடிவதற்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிய வரும்.
பிரிட்டனின் 650 நாடாளுமன்ற இடங்களில் 326 இடங்களை வெற்றி பெறும் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும்.
இதற்கிடையே பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களான 8 பேர் போட்டியிட்டனர்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகளின் சார்பில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களும், கறுப்பினத்தவர்களும் முன்பைவிட அதிக அளவில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.
உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய எட்டுத் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்த நிலையில் இவர்களது வெற்றியை தமிழ் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.