நித்தியானந்தா சாமியார் பற்றியும் கைலாசா நாடு பற்றியும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
2019ஆம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்ற நித்தியானந்தா அங்கு கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கு தனி கடவுச்சீட்டு, பணத்தாள்கள் போன்றவற்றையும் அறிவித்தார்.
அத்துடன் நிறுத்தாமல் கைலாசா சார்பில் பல நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டனர் நித்யானந்தாவின் சிஷ்யைகள்.
இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும் கைலாசா நாட்டை அங்கீகரித்திருப்பதாகக் கூறி, ஐ.நா சபையின் கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறிருக்க கைலாசாவின் பெண் பிரதிநிதியின் பேச்சு நீக்கப்படும் என ஐ.நா சபை அறிவித்திருந்தது.
இந்நிலையில் நீண்ட கால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எதிர்வரும் 21ஆம் திகதி கைலாக இருக்கும் இடத்தை அறிவிக்கப் போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் 21ஆம் திகதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம்“ என ஒரு பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையில் எதிர்வரும் 21ஆம் திகதி கைலாசா இருக்கும் இடம் தெரிய வருமா? இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்