பெருந்தலைவர் அவர்களின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய சமூக மக்களுக்கும் பேரிழப்பாகும்- இவ்வாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் ஐயாவின் மறைவு குறித்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர நேர்மையுடனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் செயற்பட்ட மூத்த அரசியல்வாதி என்றால் அது மிகையாகாது. சம்பந்தன் ஐயா அவர்கள் பல்வேறு இக்கட்டான நேரங்களில் எடுத்த பல முடிவுகள் இலங்கை அரசியலில் மிகவும் முக்கியமானவை.
ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அவர் 1977 முதல் அரசியல் பணியாற்றிவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ள அவரது சேவை தமிழ் மக்கள் என்ற எல்லையில் மட்டும் நின்று விடாமல் இலங்கையின் அனைத்து சமூகங்களின் அரசியல்வாதியாகவும் பாராளுமன்றத்தில் செயற்பட்டவர்.
அன்னாரின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய சமூக மக்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எமது அனுதாபத்தினை தெரிவித்து நிற்கின்றோம். அன்னாரின் அயராத சேவைகளையும் அரசியலில் அவரது வரலாறும் என்றும் நினைவுகூரப்படும் என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் திரு. நடராஜ்குமார் அவர்களும், செயலாளர் நாயகம் திரு. துரைகணேசலிங்கம் அவர்களும் இணைந்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.