இலங்கையில் மேலதிக வகுப்பு கற்பித்தல் தொழில் முறைப்படுத்தப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
குறித்த கற்பித்தல் தொழில் மூலம் பெற்றோர்களிடமிருந்து சுமார் 200 பில்லியன் ரூபாய் புழக்கத்தில் விடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது போட்டித் தன்மையுடன் கூடிய தேர்வு முறையால் பெற்றோர்கள் பெரிய அதிக தொகையை செலவழித்து தங்களுடைய பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதாகவும் விசேடமாக 3,4,5,10,11 மற்றும் 12,13 போன்ற தரங்கிளிலுள்ள அதிகளவான மாணவர்கள் அநேகமான மேலதிக வகுப்புகளில் கலந்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
அதன் ஒட்டுமொத்த சந்தை மதிப்பைப் பார்க்கும் போது, ஆண்டுக்கு 200 பில்லியன் ரூபாய் பரிமாற்றம் இதனுள் நடத்தப்படுவதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது மேலதிக வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது இல்லை எனவும் , மேலதிக வகுப்புகளை ஒழுங்குபடுத்துவதும், வரி விதிப்புக்கு சமர்ப்பிப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
அதற்காக, தற்போது அரசாங்கம் தலையிடாவிடின், பாடசாலைக் கல்வி நிலைகுலைந்து, மேலதிக வகுப்புகளின் வலையில் சிக்கிவிடும் என அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள நிலைமை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பெற்றோர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செய்யும் செலவுகள் குறித்தும் சரியான புரிதல் மற்றும் குழந்தைகள் ஏன் மேலதிக வகுப்புகளில் பங்கேற்கிறார்கள் என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும் வசந்த அத்துகோர குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர் வசந்த அத்துகோரள,
“சம்பந்தப்பட்ட பாடங்களில் சித்தியடையாதவர்கள் கூட மேலதிக வகுப்புகளுக்கு வந்து பாடம் கற்பிக்கிறார்கள். அவர்களின் தகுதிகள் ஏதேனும் ஒரு வகையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். கல்வி சீர்திருத்தத்தில் தனியார் கல்வியையும் சேர்க்க வேண்டும். இதில் கல்வி அமைச்சுக்கு பெரும் பங்கு உள்ளது” என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.