அரசாங்க உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60 ஆக குறைத்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கு நிதியமைச்சரினால் 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்காக கடந்த ஒகஸ்ட் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பாதீட்டில் முன்மொழியப்பட்டிருந்தது. அதற்கு நாடாளுமன்றமும் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அதன்படி ஓய்வூதிய பிரமாணக் குறிப்பில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது. அதற்கமைய, கடந்த ஜனவரி 6 ஆம் திகதி வெளியிப்பட்ட பொது நிருவாகச் சுற்றறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் இரத்துச் செய்யப்படவுள்ளது.
யாருக்கெல்லாம் பொருந்தும்
கட்டாய ஓய்வு வயதானது, அரசியலமைப்பின் மூலம் நீதித்துறை சட்டத்தின் மூலம் அல்லது குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிச் சேவை உத்தியோகத்தர்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இந்த திருத்தம் பொருந்தும்.
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் அனைத்து அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக கருதி செயற்படுதல், 60 வயதுக்கு மேல் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் டிசம்பர் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் 60 வயது பூர்த்தியாகும் அரச உத்தியோகத்தர்கள் அவர்களின் விருப்பத்தின் படி குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் ஓய்வு பெற முடியும்.
அவ்வாறு ஓய்வுபெறவுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், உரிய நடைமுறைப்படி, தங்களது ஓய்வுபெறும் விண்ணப்பங்களை, உரிய நியமன அதிகாரியிடம் அனுமதி பெற்று, அதனை ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.