ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் சூழலில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு மாத்திரமல்ல அரசியல் கட்சிகளுக்கே நம்பிக்கையில்லாதுள்ளது.
அதன் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்கவுக்குக்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்க வேண்டும். அது கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுபவராக இருக்க வேண்டும்.
ஆனால், அரசியலமைப்பில் உள்ள சில ஓட்டைகள் அல்லது சரத்துகள் தொடர்பிலான தெளிவின்மையால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஒருவருடத்துக்கு நீடிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் பொது வெளியில் தெரிவித்து வருகின்றனர்.
என்றாலும், இந்த கருத்துக்கு ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனக் கூட கடும் எதிர்ப்பை வெளியிடடுள்ளது. ”தேர்தல்களை ஒத்திவைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேசிய மக்கள் சக்தியும் தேர்தல்களை ஒத்திவைக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
(24.06.2024) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரது ஆலோசகர் ஒருவர் தலைமையில் விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளார்.
இந்தக் குழு ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்ற மனநிலையை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்பதே இவர்களது இலக்காகும் எனக் கூறினார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்றால் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பை மீற வேண்டும். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதை நோக்கமாக கொண்டு ஐ.தே.கவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான ஆளுங்கட்சினரும் செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது. இதற்கு ஜனாதிபதியின் மறைமுக ஆசி உள்ளதாகவும் அறிய ஆளுங்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டால் அதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை தேசிய மக்கள் சக்தி தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெற போகிறதென கணிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதுடன், தேசிய மக்கள் சக்திக்கு வரலாறுகாணாத வகையில் மக்களின் ஆதரவு பெருகியுள்ளதாக சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாதென்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது.