வளரும் பொருளியல்களின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ அமைப்பில் சேர்வதற்கான் ஆயத்தப் பணிகளை மலேசியா விரைவில் தொடங்கும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சீன ஊடகமான குவான்சாவிற்கு அளித்த நேர்காணலில் அவர் இதை கூறியுள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை இணைந்து ஏற்படுத்திய கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’. பின்னர் அதில் சவூதி அரேபியா, ஈரான், எத்தியோப்பியா, எகிப்து, அர்ஜென்டினா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்றவையும் இணைந்துகொண்டன.
மேலும் 40க்கு மேற்பட்ட நாடுகள் இணைய ஆர்வம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
“பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்வதற்கான அதிகாரபூர்வ நடைமுறைகளை விரைவில் தொடங்கவிருக்கிறோம். தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் இறுதி முடிவுக்குக் காத்திருக்கிறோம்,” என்று திரு அன்வார் நேர்காணலில் கூறியது தொடர்பான காணொளியை குவான்சா, பதிவேற்றியுள்ளது.
அன்வார் இவ்வாறு கூறியதாக அவரது அலுவலகப் பிரதிநிதி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இன்று ஜூன் 18ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.
மேல்விவரங்களை அன்வார் அந்த நேர்காணலில் குறிப்பிடவில்லை.