ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக புதிய பிரேரணை எதிர்வரும் 28ஆம் திகதி விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாகத் தயாரிக்கப்படக் கூடிய புதிய பிரேரணை, 28ஆம் திகதி இறுதி சமர்ப்பணத்துக்கு வரும் வரை அங்கத்துவ நாடுகளின் விருப்பு வெறுப்புகள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, மாறி மாறி திருத்தங்களுக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், இதற்கு முந்திய பிரேரணையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமை, அண்மைக்கால மனித உரிமை மீறல்கள், பலவந்தமான கைதுகள் போன்றவற்றின் அடிப்படையில் புதிய பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
51வது அமர்வு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இம் மாதம் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ஜெனீவா சென்று அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோர் ஜெனீவா சென்றுள்ளனர்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து தமிழ் அரசியல்தலைமைகள் சிலரும் ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.
இம்முறை நடைபெறும் ஜெனிவா அமர்வில் இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மனித உரிமைகள் நெருக்கடியினையும் சந்திக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.