உண்மையான ஜனாதிபதித் தேர்தலுக்குப் பதிலாக போலியான வாக்கெடுப்பு நடத்துவது போன்ற அறிக்கைகளை வெளியிடுவது மக்களின் கவனத்தை தேவையற்ற விடயங்களுக்கு திசைதிருப்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொது வாக்கெடுப்பை நடத்தி பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய இவ்வறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த மஹிந்த தேசப்பிரிய ;
”ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டுமானால், அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும்.
இந்த நோக்கத்திற்காக சட்டமூலமொன்றை வரைந்து, உயர் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்று, அது அரசியலமைப்புடன் ஒத்துபோகிறதா என்பதை ஆராய்ந்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.
அத்துடன், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்குமாயின், ஜனாதிபதித் தேர்தலை நேரடியாக நடத்தி வெற்றி பெறமுடியுமாயின், ஏன் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
மறுபுறத்தில், வாக்கெடுப்பு தோல்வியடைந்தால், மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும். அது இரண்டு செலவுகள்.
மேலும் பொதுவாக்கெடுப்பு என்பது பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு எந்த வகையிலும் மாற்றீடாக இருக்காது.
எனவே, உண்மையான ஜனாதிபதித் தேர்தலுக்குப் பதிலாக போலியான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், சில சமயங்களில் நான்கு தேர்தல்களை நடத்த வேண்டியிருக்கும்.
இது நடக்காத ஒன்றை பேசுவது போல் உள்ளது. இந்த சர்வஜன வாக்கெடுப்பு கருத்து வெளிப்பாடானது மக்களின் கவனத்தை தேவையற்ற விடயங்களுக்கு திசை திருப்புவதாகவே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.