தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடரின் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று(31) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் பேசிய முழு தொலைபேசி உரையாடலையும் நீதிமன்றத்தில் சான்றுப்படுத்துமாறு நீதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கடந்த 22ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்று தொடர்பில் விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாக தமீம் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் அணிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்திலும் தமீம் ரஹ்மான் கலந்து கொண்டிருந்ததார். இதன்போது தம்புள்ளை அணி 18 வீரர்களை ஒப்பந்தம் செய்திருந்தது.

2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் 21ம் திகதி வரை கண்டி,தம்புள்ளை மற்றும் கொழும்பு ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

Recommended For You

About the Author: admin