பல்வேறு தொழில்துறைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
‘கருசரு’ திட்டத்துடன் இணைந்து தேவையான சட்ட விதிகளை தயாரிப்பது இந்த முயற்சியில் அடங்கும்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (President Media Centre – PMC) நேற்று செவ்வாய்க்கிழமை நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை – (Collective Path To A Stable Country) என்ற தலைப்பின் கீழ் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான அரசாங்கத்தின் பொறுப்புக்களை எடுத்துரைத்தார்.
பண்டிகைகளை கொண்டாடுவதற்கான சூழல் இல்லை என கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வெசாக், பொசன், எசல, கிறிஸ்மஸ் ஆகிய பண்டிகைகளை கொண்டாடுவதற்கான சூழலை மீட்டெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வங்கி வட்டி விகிதங்களை சுமார் 25% இலிருந்து12% முதல் 8 % வரை குறைத்தல், ஊழல் எதிர்ப்புச் சட்டம், தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டம், சொத்துப் பொறுப்புச் சட்டம் போன்ற பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களையும் அமைச்சர் நாணயக்கார எடுத்துரைத்துள்ளார்.
மேலும், அரசாங்கத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை நிவர்த்தி செய்ததுடன், அறிவிக்கப்பட்ட சம்பளத்தை பூர்த்தி செய்ய முடியாத முதலாளிகளிடமிருந்து அரசாங்க தோட்டங்களை மீளப் பெற்று திறமையான தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்றுவதற்கு ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
பல்வேறு தொழில்களில் உள்ள 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கருசரு வேலைத்திட்டத்துடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ள இந்த முயற்சிக்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.