கிளிநோச்சிக்கு வருகைத்தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கப்போவதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து கருத்துரைத்த யோகராசா கனகரஞ்சினி ;
”இலங்கை அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசியிருக்கிறோம், ஜனாதிபதியாக இருந்தவர்களை எத்தனை தவடைகள் சந்தித்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 12 இற்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை பல்வேறு சந்தர்ப்பங்களின்போது சந்தித்துள்ளோம்.
இறுதியாக மூன்று மாத காலத்திற்குள் எங்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஐந்து பேரின் சுயவிபரக் கோவைகளை, சாட்சியங்களுடன் கையளித்திருந்தோம்.
ஆனால், நான்கு வருடங்களாகியுள்ள நிலையில், நாங்கள் வழங்கிய கோரிக்கைகள் தொலைந்து போய்விட்டதாகவும், மீண்டும் அவற்றை கையளிக்குமாறு கோருகின்றனர்.
இப்படியானதொரு இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் பேசுவதற்கு தயாரில்லை. ஜனாதிபதியையும் சந்திக்கத் தயாரில்லை. சர்வதேசத்தின் ஊடான ஒரு பொறிமுறையை எதிர்பார்த்து எமது நகர்வுகளை முன்னெடுக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.